26 நவம்பர் 2011

பொன்னேறு

எங்கள் கிராமத்தில் கடைப்பிடித்த! நிகழ்வுகளில் ஒன்று “நல்லேறு” என்று மறுவிய “பொன்னேறு”.
எங்கள் பகுதியில் எல்லா கிராமங்களைப் போலவே, என் கிராமத்திலும் நல்லேறு கட்டுவார்கள். இது சித்திரை மாதத்தில் ஒரு நல்ல நாளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிகழ்வு. (ஆண்டின் முதல் நிகழ்வுவே வேளாண்மைச் சார்ந்ததாக இருக்கட்டுமே என்றிருக்கலாம்.)


 நல்லேறு அன்றெல்லாம் என் கிராமத்தில் ஒரே நிலப்பரப்பில் அனைத்து
மக்களும் ஒன்றாய்கூடி கொண்டாடினார்களாம்.  எனக்கு தெரிந்து சிறுச் சிறு குழுக்களாய்தான்... அதாவது பங்காளிகள்,உறவினர்கள் என்று தனித்தனிக்
குழுக்களாய் கொண்டாடினார்கள்.                                                                                   

நல்லேறுக்கான முதல் நாளில்,காளைமாடுகளுக்கான மூக்கணாங்கயிறு, பிடிக்கயிறு, நெற்றிக்கயிறு, கழுத்து கயிறு, போன்றவையும், கலப்பைக்கான கயிறுகளும் புதிதாக வாங்குவார்கள். (கலப்பைக்கூட புதிதாய் இருக்கும்)

நல்லேறு அன்று விடியலிலே... ஊர் பூசாரி,அனைவர் வீட்டிற்கும் துளசி பொட்டலம் போடுவார்.அந்த பொட்டலம் தாமரை இலையாலோ அல்லது  கொட்டமுத்து (ஆமணக்கு) இலையாலோ கட்டப்பட்டிருக்கும். உள்ளே துளசி இலைகளால் கட்டப்பட்ட சிறு மாலை இருக்கும்.
நல்லேறு அன்று, பெண்கள்...வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் கோலமிட்டு நல்லேறுக்கென  “காப்பி அரிசி” கிளருவார்கள். (காப்பியரிசி என்றால்... அரிசியில் வெல்லப்பாகு (சர்க்கரை கரைசல்)ஊற்றி அத்தோடு பொட்டுக்கடலை, எள் தூவி கிளரப்படும் ஒரு திண்பண்டம்.)

ஆண்கள், உழவுமாடுகளையும் கலப்பைகளையும் குளத்திலோ ஏரியிலோ கழுவி சுத்தப்படுத்தி...  மஞ்சள் தடவி, சந்தனம், குங்குமம் வைத்து  அலங்கரித்து, காளைகளுக்குப் புது கயிற்றை பூட்டுவார்கள்.  காளைகளுக்கென வீட்டிலே இருக்கும் கழுத்து மணி, நெற்றிச் சலங்கையையும் சுத்தப்படுத்தி காளைகளை அலங்கரிப்பார்கள். கலப்பைக்கும் மாங்கொத்து கட்டி, மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைத்துப்  புதுக்கயிற்றால் கட்டி (கயிற்றை  நகத்தடியிலிருந்து ஏர்காலில் கட்டி மோழியில் பிணைப்பது) அலங்கரிப்பார்கள்.

அலங்கரித்த மாடுகளும் கலப்பைகளும் மற்றும் காப்பியரிசி உட்பட்டப் படையல் பொருட்களும்... மனிதர்களும், நல்லேறு கட்டும்   நிலத்தில்கூடுவார்கள்.   

படையல் பொருட்கள் கொண்டுவந்த ஒரு கூடையை கிழக்கு பார்க்க சாய்த்து வைத்து, அங்கே... வேட்டிக்கு மேல் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பெரியவர் ஒருவர், பசுமாட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பார். பிள்ளையாருக்கு சந்தனம் குங்குமம் வைப்பார்.பிள்ளையாருக்கு பக்கத்தில் அருகம்புல் செருகி வைக்கப்படும். அதே இடத்தில் ஒரு சாமி விளக்கு பொருத்தி வைத்து... அதில் பூசாரி கொடுத்த துளசி மாலை போடுவார்கள்.

இந்த சமயத்தில் கலப்பையில் காளைகளை பூட்டி ஏர் உழத் தயார்படுத்தி வைத்துவிடுவார்கள்.

இப்போது அந்த இடத்தில் வாழைஇலையில் காப்பியரிசியை வைத்து...  பத்தி கொளுத்தி வைக்கப்படும். பின் தேங்காய் உடைத்து வைத்து... ஒரு தாம்பூலத்தட்டில் சூடம் ஏற்றி தீபம் காட்டப்படும். உழவு மாடுகளுக்கும் கலப்பைக்கும்... தீபம் காட்டப்படும். ஏர் கிழக்குப் பார்க்க நிற்கும்... தீபம் காட்டி முடித்ததும் ... அனைத்து ஏர்களும் ஒன்றன் பின் ஒன்றாக கிழக்கு நோக்கிச் சென்று மேற்குக்குத் திரும்பும். இப்படியாக மூன்று சுற்றுகள் ஏர் உழவார்கள்.
இப்படி வட்டங்களாக வரும் போது ,கொஞ்சம் சிறுவர்களாக இருப்பவர்களையும் மோழியை பிடித்துக்கொண்டு வருவார்கள். நான் என் அண்ணனோடு அப்படி பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றேன்.

மூன்று சுற்றுகள் ஏர் ஓட்டியபின் பழைய இடத்திலேயே ஏரும் ஓட்டியவர்களும் நிற்பார்கள். மீண்டும் காளைகளுக்கு  தீபம் காட்டி திருநீறு பூசிவிடுவார்கள். காப்பியரிசி அனைவருக்கும் கொடுப்பார்கள்.
பிறகு ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து... கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவருவார்கள்.

இப்படிதான் எங்க கிராமத்தில் “பொன்னேறு” எங்கின்ற “நல்லேறு” கொண்டாடுவார்கள். இது பகுதிக்கு பகுதி சற்று மாறலாம்.

இந்த நிகழ்வுகள்.... நடைமுறைகள்... பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் நமக்கு எதையோ சொல்லிகொடுக்கின்றன.... நீங்களே பொருளுணர்ந்து கொள்வீர்களாக.

நன்றி.
அன்புடன் நான் ,
சி.கருணாகரசு.
உகந்த நாயகன் குடிக்காடு.

23 நவம்பர் 2011

உ.நா.குடிக்காடு

வணக்கம்...

வானம்பார்த்த எங்கள் மண்ணில் அறுவடைக்கு பின், கைக்கு கிட்டிய மகசூல்தான்... என் கிராமமக்களின் வாழ்வாதாரம்.
வானம் பார்த்த நிலமாக இருந்தாலும், அன்றெல்லாம்  வஞ்சனைச் செய்ததில்லை எங்கள் மண்.

கம்பு,சோளம்,வரகு தான் முதன்மையான உணவு பயிர்கள்.
கடலை,எள்,உளுந்து,துவரை,கொள்ளு,கேழ்வரகு, (கொட்டமுத்து) ஆமணக்கு, தட்டைபயிர் போன்றவையும் விளையும் மண்.

அந்த மண்ணில், நான் காண கிடைத்தை நிகழ்வுகளை கொஞ்சம் கொஞ்சமாய் பதிவேற்றுகிறேன்.


இந்த இடம் நான் சிறுவயதில் ஆடுமாடுகள் மேய்த்த இடம். மண் அப்படியே இருக்கு மனிதர்கள் மாறிவிட்டார்கள்.

( தொடர்வேன்)

நன்றி வணக்கம்.

19 நவம்பர் 2011

உகந்த நாயகன் குடிக்காடு

வணக்கம்...

எனது கிராமங்களின் அடையாளங்களையும்... நிகழ்வுகளையும் பதிவாக்கி என் அடுத்த தலைமுறைக்கு கொடுத்திடவே இந்த வலைத்தளம்.


இதுதான் எங்க ஊருக்கு நடுவில் உள்ள மாரியம்மன் கோயில்.

(பட உதவி அரசன் எங்கிற சே.ராசா)